‘‘தலைமைத்துவ பயிற்சியில் பல மாணவர்கள் தன்னார்வமாக முன்வந்து கருத்துக் கூறியதை அவதானித்து, தன்னம்பிக்கை பெற்று, நானும் குழு செயல்பாடுகள் மூலம் எனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினேன். எதிர்வரும் காலங்களிலும் எனது தலைமைத்துவத்தை கல்வியிலும், வாழ்க்கையிலும் சிறப்பாக வெளிபடுத்துவேன் என்ற நம்பிக்கை என்னில் ஏற்பட்டுள்ளது.’’
- இலட்சிகன், 14 வயது, தரம் 9, யா/நெல்லியடி மத்திய கல்லூரி
Visions Global Empowerment, Sri Lanka மற்றும் Ratnam Foundation,UK நிறுவனங்கள் இணைந்து வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட யா/கற்கோவளம் மெ.மி.த.க. பாடசாலை, யா/இமையாணன் அ.த.க. பாடசாலை, யா/கொற்றாவத்தை அ.மி.த.க. பாடசாலை, யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மற்றும் யா/நெல்லியடி மத்திய கல்லூரி ஆகிய ஐந்து பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 6 முதல் 9 வரை கல்வி பயிலும் 42 இளம் தலைவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியினை நடாத்தியது. வடமராட்சி வலயக் கல்விப் பணிமனையில் ஆவணி மாதம் 11 முதல் 15-ம் திகதி வரை நடாத்தப்பட்ட இந்த தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறையில் மாணவர்கள் தலைமைத்துவம் சார்ந்த பங்கேற்றல் முறை செயற்பாடுகளில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், தலைமைத்துவம், குழுசெயல்பாடு, தொடர்பாடல், திட்டமிடல், நேர முகாமைத்துவம் மற்றும் முன்வைப்பு திறன் சார்ந்த திறன் விருத்திக்கும், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்க்கும் இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். ஐந்து நாட்கள் காலை 8.30 தொடக்கம் மாலை 1.30 மணிவரை நடைபெற்ற இந்த பயிற்சிப் பட்டறையில் சிறந்த முறையில் மாணவர்கள் தங்களது தலைமைத்துவம் சார்ந்த துலங்கல்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக, பயிலுனர்கள் நாளாந்த செயற்பாடுகளை எவ்வாறு திட்டமிட்டு, ஒழுங்கமைத்து செயற்படுகின்ற வழிப்படுத்தலை பெற்றுக் கொண்டனர். இப்பயிற்சியில் ஒவ்வொரு மாணவரும் தமக்கான சுயவிருத்தி திட்டம் (Personal Development Plan) ஒன்றை வடிவமைத்தமை இப்பயிற்சி நெறியின் சிறப்பை மேம்படுத்தியது.
வடமராட்சி வலயத்தின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புடன், விஷன்ஸ் பயிற்றுனர் குழாம் சிறப்பாக வழிநடத்திய இந்த பயிற்சி இளம் தலைவர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை ஊக்குவிப்பை வழங்கிய ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது எனலாம்.







